திருக்கருகாவூர் முல்லைவனநாதர் கோயில்
தேவாரம் பாடல் பெற்ற திருக்கருகாவூர் திருக்கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | முல்லைவனம், மாதவிவனம், கர்ப்பபுரி |
பெயர்: | திருக்கருகாவூர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | கருகாவூர் |
மாவட்டம்: | தஞ்சாவூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | முல்லைவனநாதர் |
தாயார்: | கருக்காத்தநாயகி. |
தல விருட்சம்: | முல்லை. |
தீர்த்தம்: | க்ஷீரகுண்டம், பிரம்மதீர்த்தம் |
ஆகமம்: | சிவாகமம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் |
வரலாறு | |
அமைத்தவர்: | சோழர்கள் |
திருக்கருக்காவூர் - திருக்கடாவூர் வெள்ளடயீஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடல் பெற்ற சோழ நாட்டு காவிரி தென்கரை தலம் சிவன் கோவிலாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் வட்டத்தில் காவிரி வெட்டாற்று கரையில் அமைந்துள்ள சிவன் கோவில் ஆகும். பசியோடிருந்த சுந்தரருக்கு இறைவன் கட்டமுதும் நீரும் தந்து பசிபோக்கிய தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் தேவாரப்பாடல் பெற்ற சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 18-ஆவது சிவத்தலமாகும்.
தல வரலாறு
ஊர்த்தவ மகரிஷியின் சாபத்தால் நித்துவரின் மனைவி வேதிகைக்கு ஏற்பட்ட கருச்சிதைவை இறைவன் மருத்துவம் பார்த்து அவள் கருவைக் காத்ததால் - கருகாவூர் என்று பெயர் பெற்றது.
திருக்களாவூர் என மக்களால் பொதுவாக அழைக்கப்பெறும் இத்தலம் மாதவி வனம், முல்லைவனம், திருக்கருகாவூர், கர்ப்பபுரி என்று பல பெயர்களால் நூல்களில் குறிப்பிடப்படுகிறது. மாதவி (முல்லைக்கொடி)யை தலவிருட்சமாகக் கொண்டுள்ளதால் மாதவி வனம் (முல்லை வனம்) என்றும், கரு+கா+ஊர். கரு-தாயின் வயிற்றில் உள்ள (குழந்தைக்) கரு, கா-காத்த (காக்கின்ற), ஊர்-ஊர், கருகாவூர் எனப் பெயர் பெற்றது.[1]
தல சிறப்புகள்
- ஸ்காந்தத்தில் க்ஷேத்திர வைபவக் காண்டத்தில் சனற்குமார சங்கிதையில் நாரதருக்கு சனற்குமாரர் கூறுவதாகவுள்ள பகுதியில் இத்தலச் சிறப்பு இடம் பெற்றுள்ளது.
- இக்கோயிலில் ரதவடிவிலான சபாமண்டபமும் அதில் நித்துவ முனிவர் பூசித்த சிவன்|லிங்கமும் உள்ளது.
- மூலவர் சுயம்பு மூர்த்தி; மேற்புறம் பிருதிவிபாகம்; புற்று மண்ணாலாகியது.
- சுவாமி திருமேனியில் முல்லைக்கொடி (இத்தலம் ஒரு காலத்தில் முல்லை வனமாக இருந்ததால்) சுற்றிய வடு உள்ளது.
- இத்தலத்தில் தலவிநாயகராக கற்பகவிநாயகர் உள்ளார்.
- இத்தலத்தில் உள்ள நந்தி - உளிபடாத விடங்கமூர்த்தம் என்பர்.
- கருச்சிதைவுற்று மகப்பேறின்றி இருப்போர் இத்தலத்திற்கு வந்து வழிபட்டு மகப்பேறு அடைகின்றனர்.
- இத்தலத்தை வழிபடுவோர்க்குக் குறைப்பிரசவம் ஏற்படுவதில்லை.
- கர்ப்ப வேதனையும் மிகுதியாவதில்லை.
- கருவுடன் மரணமடைவோரும் இல்லை.
- கருவைத் தருவதும், காப்பதுமாகிய அருள் திறன் பொருந்தி அம்பாள் விளங்குகிறாள்.
- இத்தல அம்பாளுக்கு சுத்தமான நெய்யால் தீபமிட்டு, நெய்யால் அம்பாள் திருவடியில் அபிஷேகம் செய்து அந்நெய்யையுண்டால் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது.
- இத்தலத்தில் சோழர்கள், மதுரைகொண்ட கோப்பரகேசரிவர்மன் கால கல்வெட்டுக்கள் உள்ளன.
- முதலாம் இராசராசன் கல்வெட்டில் "நித்தவிநோத வளநாட்டு ஆவூர்க் கூற்றத்துத் திருக்கருகாவூர் " என்று தலம் குறிக்கப்படுகின்றது.
பஞ்சஆரண்யம்
காவிரியின் தென்கரையிலுள்ள பஞ்ச ஆரண்யங்கள் ஐந்து அவை:-
1. கருகாவூர் - முல்லைவனம், 2. அவளிவணல்லூர் - பாதிரிவனம், 3. அரதைப்பெரும்பாழி - வன்னிவனம், 4. இரும்பூளை - பூளைவனம், 5. கொள்ளம்புதூர் - வில்வவனம்
என்பனவாம். இத்தலம் ஐந்தில் ஒன்றான முல்லைவனமாகும்.
- இந்த ஐந்து தலங்களையும் முறையே வைகறை, காலை, நண்பகல், மாலை, அர்த்த சாமம் ஆகிய காலங்களில் வழிபடும் பழக்கம் இன்றும் வழக்கில் உள்ளது.
அமைவிடம்
கும்பகோணம் - ஆவூர் - மிலட்டூர் வழியாகத் தஞ்சாவூர் செல்லும் சாலையில் உள்ளது இத்தலம். இத்தலத்திற்கு தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்தும், கும்பகோணத்திலிருந்தும் நகரப் பேருந்துகள் உள்ளன.
திருத்தலப் பாடல்கள்
இத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்:
திருஞானசம்பந்தர் பாடிய பதிகம்
முத்தி லங்குமுறு வல்லுமை யஞ்சவே
மத்த யானைமறு கவ்வுரி வாங்கியக்
கத்தை போர்த்தகட வுள்கரு காவூரெம்
அத்தர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.
போர்த்த மெய்யினர் போதுழல் வார்கள்சொல்
தீர்த்த மென்றுதெளி வீர்தெளி யேன்மின்
கார்த்தண் முல்லைகம ழுங்கரு காவூரெம்
ஆத்தர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே..
திருநாவுக்கரசர் பாடிய பதிகம்
குருகாம் வயிரமாங் கூறு நாளாங் கொள்ளுங் கிழமையாங் கோளே தானாம்
பருகா அமுதமாம் பாலின் நெய்யாம் பழத்தின் இரதமாம் பாட்டிற் பண்ணாம்
ஒருகா லுமையாளோர் பாக னுமாம் உள்நின்ற நாவிற் குரையா டியாங்
கருவா யுலகுக்கு முன்னே தோன்றுங் கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே..
பூத்தானாம் பூவின் நிறத்தா னுமாம் பூக்குளால் வாசமாய் மன்னி நின்ற
கோத்தானாங் கோல்வளையாள் கூற னாகுங் கொண்ட சமயத்தார் தேவ னாகி
ஏத்தாதார்க் கென்று மிடரே துன்பம் ஈவானா மென்னெஞ்சத் துள்ளே நின்று
காத்தானாங் காலன் அடையா வண்ணங் கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே..
இவற்றையும் பார்க்க
குடமுழுக்கு
இக்கோயிலின் குடமுழுக்கு மன்மத வருடம் தை மாதம் 15ஆம் நாள், 29 ஜனவரி 2016 அன்று நடைபெற்றது.[2] [3]
மேற்கோள்கள்
- ↑ வித்துவான் மா.சிவகுருநாதப்பிள்ளை, திருக்கருகாவூர் அருள்மிகு முல்லைவனநாதசுவாமி திருக்கோயில் தல வரலாறு, திருக்கோயில் வெளியீடு, 2000
- ↑ "கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முடிவு, தினகரன், 27.1.2016". Archived from the original on 2021-07-26. பார்க்கப்பட்ட நாள் 2016-01-28.
- ↑ முல்லைவனநாதர் கோயில் கும்பாபிஷேகம், தினமணி, 30 ஜனவரி 2016
வெளி இணைப்புக்கள்
- தல வரலாறு தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் பரணிடப்பட்டது 2013-06-18 at the வந்தவழி இயந்திரம்
- தலவரலாறு, சிறப்புக்கள், அமைவிடம் பரணிடப்பட்டது 2013-06-18 at the வந்தவழி இயந்திரம்
- சம்பந்தர் பாடிய பதிகம் பரணிடப்பட்டது 2014-12-25 at the வந்தவழி இயந்திரம்
- அப்பர் பாடிய பதிகம் பரணிடப்பட்டது 2013-03-14 at the வந்தவழி இயந்திரம்
- திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை திருக்கோயில்
திருக்கருகாவூர் முல்லைவனநாதர் கோயில் | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: சக்கரப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோயில் |
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலம் | அடுத்த திருத்தலம் பாபநாசம் பாலைவனேஸ்வரர் கோயில் |
|
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தல எண்: 18 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 18 |