அயூப் கான்
முகம்மத் அயூப் கான் محمد ايوب خان | |
---|---|
பாகிஸ்தான் சனாதிபதி | |
பதவியில் 27 அக்டோபர் 1958 – 25 மார்ச் 1969 | |
முன்னையவர் | இஸ்கந்தர் மிர்சா |
பின்னவர் | யாஹ்யா கான் |
பாகிஸ்தான் படையின் தலைமைத் தளபதி | |
பதவியில் 17 ஜனவரி 1951 – 26 அக்டோபர் 1958 | |
முன்னையவர் | டக்ளஸ் கிரேசி |
பின்னவர் | மூசா கான் |
பாகிஸ்தான் பிரதம மந்திரி | |
பதவியில் 7 அக்டோபர் 1958 – 28 அக்டோபர் 1958 | |
குடியரசுத் தலைவர் | இஸ்கந்தர் மிர்சா |
முன்னையவர் | பெரோஸ் கான் நூன் |
பின்னவர் | நூருல் அமீன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஹரிப்பூர், பிரித்தானிய இந்தியா | 14 மே 1907
இறப்பு | 19 ஏப்ரல் 1974 இஸ்லாமாபாத், பாகிஸ்தான் | (அகவை 66)
அரசியல் கட்சி | முஸ்லிம் லீக் |
அயூப் கான் எனப் பொதுவாக அறியப்படும் முகம்மது அயூப் கான் (மே 14, 1907 – ஏப்ரல் 19, 1974), 1960 களில் ஃபீல்ட் மார்ஷலாக இருந்து பின்னர் 1958 தொடக்கம் 1969 வரையான காலப் பகுதியில் பாகிஸ்தானின் சனாதிபதியாகப் பதவி வகித்தார். 1951 ஆம் ஆண்டில் இவர் பாகிஸ்தான் இராணுவத்தின் முதல் உள்ளூர்த் தலைமைத் தளபதி (Commander in Chief) ஆனார். பாகிஸ்தான் படைத்துறை வரலாற்றில் முழுமையான ஜெனரல் பதவியைப் பெற்ற மிக இளம் வயதினராகவும், தனக்குத்தானே பீல்ட் மார்ஷல் என்னும் பதவி அளித்துக் கொண்டவராகவும் இருந்தார். பாகிஸ்தானில் சதிப் புரட்சி மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றிய முதல் படைத்துறைத் தளபதியும் இவரே.
இளமைக் காலம்
வடமேற்கு எல்லை மாகாணத்தில் உள்ள ஹரிப்பூர் மாவட்டத்தின் ரெகானா என்னும் ஊரில் தரீன் இனக்குழுவைச் சேர்ந்த மிர் டாட் கான் என்பவரது இரண்டாம் மனைவிக்கு முதல் மகனாக அயூப் கான் பிறந்தார். அயூப் கானின் தந்தை அரச இந்தியப் படைத்துறையின் குதிரைப் படைப் பிரிவொன்றில் பணியாணை பெறாத (non-commissioned) தரத்து அதிகாரியாகப் பணிபுரிந்து வந்தார்.[1] அடிப்படைக் கல்வி பெறுவதற்காகத் தனது ஊரிலிருந்து 4 மைல்கள் தொலைவிலிருந்த பள்ளி ஒன்றில் சேர்ந்த அயூப் கான், ஒவ்வொரு நாளும் பள்ளிக்குக் கோவேறு கழுதையில் பயணம் செய்து வந்தார். பின்னர், ஹரிப்பூரில் உள்ள பள்ளி ஒன்றுக்கு மாற்றப்பட்ட இவர் தனது பாட்டியின் வீட்டில் தங்கினார். 1922 ஆம் ஆண்டில் அலிகார் பல்கலைக் கழகத்தில் சேர்ந்த இவர் அங்கே தனது கல்வியை முடித்துக் கொள்ளாமல், சாண்டர்ஸ்ட் அரச படைத்துறைக் கழகத்தில் சேர்ந்தார். அங்கே தனது திறமையைக் காட்டிய அயூப் கானுக்கு, பிரித்தானிய இந்தியப் படையில் அதிகாரியாகப் பதவி கிடைத்தது. இரண்டாம் உலகப் போரின்போது, பர்மாப் போர் முனையில் முதலில் கப்டனாகவும் பின்னர் மேஜராகவும் பணியாற்றினார். போருக்குப் பின்னர் பாகிஸ்தான் படையில் 10 ஆவது மூத்த அதிகாரியாக இருந்தார். பிரிகேடியராகப் பதவி உயர்வு பெற்ற இவர் வாசிரிஸ்தானில் இருந்த படைப் பிரிவுக்குத் தலைமை தாங்கினார். 1948 ஆம் ஆண்டில் மேஜர் ஜெனரல் தரத்துடன் கிழக்குப் பாகிஸ்தானுக்கு (இன்றைய வங்காளதேசம்) அனுப்பப்பட்டார். பாகிஸ்தான் படையின் கிழக்குப் பகுதியின் பொறுப்பு முழுதும் இவரிடம் இருந்தது. 1949 ஆம் ஆண்டில் அஜட்டண்ட் ஜெனரல் என்னும் பதவியுடன் மீண்டும் மேற்குப் பாகிஸ்தானுக்கு வந்தார். சிறிது காலம் துணைத் தலைமைத் தளபதியாகவும் பணியாற்றி உள்ளார்.
தலைமைத் தளபதி
1951 ஜனவரி 17ல் பாகிஸ்தான் படைத்துறையின் தலைமைத் தளபதியாக இருந்த டக்ளஸ் கிரேசி என்பவரின் இடத்துக்கு அயூப்கான் நியமிக்கப்பட்டர். இதன் மூலம் இப்பதவியை ஏற்ற முதல் பாகிஸ்தானியர் என்ற பெருமை இவருக்குக் கிடைத்தது. அப்போது பாதுகாப்புச் செயலாளராக இருந்த இஸ்கந்தர் மிர்சா, அயூப் கானின் பதவி உயர்வுக்கு முக்கிய காரணியாக இருந்தார். இதன் மூலம் இருவருக்கும் இடையே நெருங்கிய உறவு ஏற்பட்டது. மிர்சா பின்னர் ஆளுனர் நாயகம் (Governor General) ஆகவும், 1956 மார்ச் 23ல் பாகிஸ்தான் குடியரசு ஆன பின்னர் சனாதிபதியாகவும் ஆனார். அயூப் கானின் பதவிக் காலத்தில் மூன்று மாதங்களே எஞ்சியிருந்தபோது, இஸ்கந்தர் மிர்சா இராணுவச் சட்டத்தைப் பிறப்பித்தார். அயூப் கான் இராணுவச் சட்டத் தளபதி ஆக்கப்பட்டார்.[2] ஆனால், அயூப்கான் சதிப் புரட்சி ஒன்றை நிகழ்த்தி மிர்சாவைப் பதவியிலிருந்து அகற்றினார்.
பாகிஸ்தான் சனாதிபதி (1958-1969)
அயூப் கான், 1958 அக்டோபர் 27 ஆம் தேதி ஆசாம், புர்க்கி, ஷேக் ஆகிய ஜெனரல்களை நள்ளிரவில் அனுப்பி இஸ்கந்தர் மிர்சாவை இங்கிலாந்துக்கு வெளியேற்றினார். பாகிஸ்தான் விடுதலை பெற்றதில் இருந்து நாட்டில் உறுதியற்ற அரசியல் நிலை நிலவியதனால் அயூப் கானின் நடவடிக்கைக்குப் பாகிஸ்தானில் நல்ல வரவேற்பு இருந்தது. 1960ல் ஊராட்சி அவையினரிடையே ஒரு மறைமுகமான கருத்தறியும் வாக்கெடுப்பு ஒன்றை அயூப் கான் நடத்தினார். ஃபீல்ட் மார்ஷல் சனாதிபதி முகம்மத் அயூப்கான் மீது உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா? என்னும் கேள்வியுடன் இடம் பெற்ற இவ் வாக்கெடுப்பில் அயூப் கானுக்கு ஆதரவாக 95.6% வாக்குகள் கிடைத்தன. இதனைத் தொடர்ந்து அவர் தனது ஆட்சி முறையை முறைப்படியாக உறுதிப்படுத்திக் கொண்டார்.
அரசமைப்புச் சட்டம்
அரசமைப்புச் சட்டம் ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுத்த அயூப் கான் 1961 ஆம் ஆண்டில் இதனை நிறைவேற்றினார். இயல்பாக மதச் சார்பற்றவராக இருந்த அயூப் கானின் அரசமைப்புச் சட்டத்தில் அரசியல்வாதிகள், மதத்தை அரசியலில் பயன்படுத்துதல் போன்றவை தொடர்பான அவரது கருத்துக்கள் செல்வாக்குக் கொண்டிருந்தன.
1962 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட இந்த அரசமைப்புச் சட்டத்தில் இஸ்லாமுக்கு உரிய மதிப்பு அளிக்கப்பட்டிருந்தாலும் அது அரச மதமாக ஆக்கப்படவில்லை. 80,000 அடிப்படைக் குடிமக்கள் தலைவர்களால் சனாதிபதி தெரிவு செய்யப்பட வழி செய்யப்பட்டிருந்தாலும், அவர்கள் சனாதிபதியின் கட்டுப்பாட்டிலேயே இருந்தனர். இம் முறையை அயூப் கான் ஐக்கிய அமெரிக்காவின் தேர்தல் கல்லூரி முறையுடன் ஒப்பிட்டார். அயூப் கானிம் அரசமைப்புச் சட்டத்தில் தேசுய அவை ஒன்றுக்கு இடமளிக்கப் பட்டிருந்தாலும் இதற்கு குறைந்த அளவு அதிகாரமே இருந்தது.