செஜாரா மெலாயு
செஜாரா மெலாயு (மலாய்: Sejarah Melayu; ஆங்கிலம்: Malay Anals; ஜாவி: سجاره ملايو) என்பது மலாய் இலக்கிய வரலாற்றுப் படைப்புகளில் மிக முக்கியமான படைப்பாகும். இதன் அசல் பெயர் (மலாய்: Sulalatus Salatin; ஆங்கிலம்: Genealogy of Kings).[1][2]
இந்த இலக்கியப் படைப்பு ஏழு வகையான பதிப்புகளில் பதிப்பாகி உள்ளது. மாபெரும் கடல்சார் சாம்ராச்சியமான மலாக்கா சுல்தானகத்தின் (Malacca Sultanate) தோற்றம், பரிணாமம் மற்றும் மறைவு பற்றிய வரலாற்றைத் தொகுத்து வழங்கும் ஓர் இலக்கியப் படைப்பாகும்.[3]
15-ஆம்; 16-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்ட இந்தப் படைப்பு, மலாய் மொழியின் சிறந்த இலக்கிய வரலாற்றுப் படைப்புகளில் ஒன்றாகக் கருதப் படுகிறது. இதுவரையிலும் மலாய் மொழியில் எழுதப்பட்ட சிறந்த இலக்கியப் படைப்புகளில் செஜாரா மெலாயு காப்பியம் தலைசிறந்து விளங்குகிறது.[4]
பொது
மலாக்கா ஆட்சியாளர்களின் இறையாண்மை மகத்துவங்கள்; அவர்களின் நீதிமன்ற மேலாண்மைச் சிறப்புகள்; இவற்றை வலியுறுத்தும் தொகுப்பாகத் தான் செஜாரா மெலாயு தொடக்கப்பட்டது. எனினும் காலப் போக்கில் அதன் பதிவுகள் பல்வேறான வரலாற்று நிகழ்வுகளையும் இணைத்துக் கொண்டன.[5]
தொடக்கக் காலத்தில், வரலாற்று புகழ் மலாக்காவின் விரைவான எழுச்சி; அதன் ஆட்சியாளர்களின் மேன்மை ஆகியவற்றில் செஜாரா மெலாயு கூடுதலாகக் கவனம் செலுத்தி வந்து உள்ளது. பொருளாதார வளப்பத்தை நோக்கிய மலாக்காவின் முன்னேற்றங்கள்; அதன் கடல் வர்த்தகத்தின் முக்கியத்துவங்கள்; அதிகார எதிர்நீச்சல்கள் போன்றவை மிக அழகாகப் பதிவு செய்யப்பட்டு வந்தன.
மலாக்கா ஆட்சியாளர்கள் வரலாறு
தீபகற்ப மலேசியா சார்ந்த கதைகள்; மற்றும் நிகழ்வுகளின் தொகுப்பாக ம்ட்டும் அல்லாமல், செஜாரா மெலாயு என்பது உண்மையில் ஆட்சியாளர்களைப் பற்றிய கதைகளின் தொகுப்பு என்று சில அறிஞர்கள் வாதிடுகின்றனர்.
மலாய் நாட்டு ராஜாக்கள் மட்டும் அல்ல; தென்னிந்தியா, சீனா, இந்தோசீனா, சயாம், ஜாவா நாட்டு அரசர்களின் கதைகளும் செஜாரா மெலாயுவில் பதிவு செய்யப்பட்டு உள்ளன.[6]
சிங்கப்பூர் வரலாறு
சிங்கப்பூர் நாட்டைப் பொறுத்த வரையில், செஜாரா மெலாயு மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் சிங்கப்பூர் அதன் பெயரை எவ்வாறு பெற்றது எனும் கதையைச் செஜாரா மெலாயு தெளிவாகச் சொல்கிறது. துமாசிக் பற்றியும் விவரிக்கப்படுகிறது.
சிங்கப்பூர் புராணங்களின் சில அசல் கதைகள் செஜாரா மெலாயுவில் காணப் படுகின்றன. அவற்றில் ஒரு கதை; நீல உத்தமன் (Nila Utama) கதை. சிங்கப்பூருக்கு சிங்கபுரா (சிங்க நகரம்) என்று பெயர் வந்த கதை. நீல உத்தமனும் அவரின் உதவியாளர்களும் துமாசிக் (Temasek) தீவில் கால் பதித்த போது, சிங்கம் அல்லது சிங்கத்தைதைப் போன்ற ஒரு விலங்கைப் பார்த்தார்கள் என்று செஜாரா மெலாயு பதிவு செய்து உள்ளது.
செஜாரா மெலாயுவின் கையெழுத்துப் பிரதிகள் 30-க்கும் மேற்பட்டவை உள்ளன. அவை இப்போது பல்வேறு உலக நூலகங்களில் பாதுகாக்கப் படுகின்றன. 2001-ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பின் யுனெஸ்கோ உலகப் பதிவேட்டில் செஜாரா மெலாயு பட்டியலிடப்பட்டது.[7][8]
டச்சு அறிஞர் ரூல்விங்க்
செஜாரா மெலாயு காப்பியம் தன் வளர்ச்சிப் படிகளில் பல நிலைகளைக் கடந்து வந்து இருக்கலாம் என்று டச்சு நாட்டு அறிஞர் ரூல்விங்க் (R. Roolvink) நம்புகிறார்.[9]
அறிஞர் ரூல்விங்க் இவ்வாறு சொல்கிறார்: தொடக்கத்தில், செஜாரா மெலாயு இரண்டு அல்லது மூன்று பக்கங்களில், மலாக்கா அரசர்களின் பட்டியலைக் காட்டும் ஓர் அட்டவணையாகத் தொடங்கி இருக்கலாம். மலாக்கா அரசர்களின் ஆட்சிக் காலத்தையும்; அவர்களின் ஆட்சிக் காலத் தேதிகளையும் வழங்கி இருக்கலாம்.[9]
கையெழுத்துப் பிரதி
காலப் போக்கில் மலாக்கா அரசர்களின் கதைகளும் வீர தீரச் செயல்களும் சேர்க்கப் பட்டன. அதனால் அந்தப் பட்டியல், நீண்ட ஒரு கையெழுத்துப் பிரதியாக விரிவுநிலை அடைந்தன. அந்தக் கையெழுத்துப் பிரதியில் பிற கதைகளும் நிகழ்வுகளும் சேர்க்கப்பட்டன. இறுதியில் தேதிகள் தவிர்க்கப் பட்டன என்று அறிஞர் ரூல்விங்க் கருதுகிறார்.[9]
வெவ்வேறு எழுத்தாளர்கள், வெவ்வேறு மொழி பெயர்ப்பாளர்கள், மற்றும் வெவ்வேறு நகல் எழுதுபவர்கள்; வெவ்வேறு காலங்களில் செஜாரா மெலாயுவை உருவாக்கி இருப்பதால், குறைந்தபட்சம் ஏழு பதிப்புகள் உருவாகி இருக்கின்றன என்று அறிஞர் ரூல்விங்க் கருத்து கூறுகிறார்.[9]
அரசர்களின் பரம்பரை பட்டியல்
1. மலாய் ஆட்சியாளர்களின் வம்சாவளியை விவரிக்கும் அரசர்களின் பரம்பரை பட்டியல் (Genealogical List of Malay Rulers)
2. மேக்ஸ்வெல் 105 பதிப்பு (Maxwell 105 Version)
3. ராபிள்ஸ் மலாய் 18 பதிப்பு (Raffles Malay 18 Version)
4. செஜாரா மெலாயு குறுகிய பதிப்பு
5. செஜாரா மெலாயு நீண்ட பதிப்பு
6. சியாக் பதிப்பு (Siak Version)
7. பலேம்பாங் பதிப்பு (Palembang Version)
தொடக்கத்தில், இந்தப் பதிப்புகளின் ஆசிரியர்கள் யார் என்பதை உறுதிப் படுத்துவது கடினமாக இருந்தது, ஏனெனில் இந்தப் பதிப்புகள் பெரும்பாலானவை முழுமையாக ஆய்வு செய்யப்படாத நிலையில் இருந்தன.[10]
திருத்தங்கள் அல்லது மாற்றங்கள்
இருந்தாலும்கூட, இன்று பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு கருத்து உள்ளது. ஜொகூர் சுல்தானகத்தின் முதல்வராக இருந்த துன் ஸ்ரீ லானாங் (Tun Sri Lanang) அவர்களால், செஜாரா மெலாயு எழுதப்பட்டு இருக்கலாம் அல்லது குறைந்த பட்ச அளவிற்குத் திருத்தப்பட்டு இருக்கலாம்.[11]
அந்தத் திருத்தங்கள் அல்லது மாற்றங்கள் 1614 பிப்ரவரி தொடங்கி 1615 ஜனவரி மாதங்களின் இடைவெளியில் நடைபெற்று இருக்கலாம். இந்தக் கருத்து இப்போது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படும் கருத்தாகும்.[11]
துன் ஸ்ரீ லானாங்
செஜாரா மெலாயுவில் திருத்தங்கள் அல்லது மாற்றங்களைத் துன் ஸ்ரீ லானாங் செய்து இருக்கலாம் என்பதற்கான சான்றுகள் உள்ளன. செஜாரா மெலாயு குறுகிய பதிப்பு; செஜாரா மெலாயு நீண்ட பதிப்பு; ஆகிய இரு பதிப்புகளின் முன்னுரையில் இருந்து அந்தச் சான்றுகள் உருவாகின்றன.[10]
தவிர செஜாரா மெலாயுவின் 12-ஆவது அத்தியாயம்; 12-ஆவது பகுதியில் நூருதின் அர் - ரனிரி புஸ்தானஸ் சலாட்டின் (Nuruddin ar-Raniri’s Bustanus Salatin 25) எனும் ஒரு பகுதி உள்ளது.[12]
1638--ஆம் ஆண்டு பதிப்பு
அந்தப் பகுதியில் காணப்படும் சான்றுகளையும் அடிப்படையாகக் கொள்ளலாம். புசுடானசு சலாட்டின் பதிவு (Garden of Sultans); 1638--ஆம் ஆண்டில் இருந்து 1641-ஆம் ஆண்டு, கால இடைவெளியில் பதிக்கப்பட்டது.
செஜாரா மெலாயுவின் உரை வரலாற்றை அடையாளம் காண்பதில் அறிஞர்கள் பலர் பல்வேறான சிக்கல்களை எதிர்கொண்டனர். அந்தச் சிக்கல்களில் முக்கியமானது; செஜாரா மெலாயுவின் உரை ஆசிரியர்களின் பெயர்கள் தெரியாதது. பல உரைகளில் அந்த உரைகளை எழுதியவர்கள் யார் என்பதும் தெரியாமல் உள்ளது.[13]
மேற்கோள்கள்
- ↑ Encyclopædia Britannica 2014
- ↑ Marsden, W. (1811). The History of Sumatra. London.
- ↑ Abdul Samad Ahmad 1979, ப. xxvii
- ↑ Encyclopædia Britannica 2014
- ↑ malay concordance project.
- ↑ Chinese history: a manual By Endymion Porter Wilkinson
- ↑ UNESCO (2001), Memory of the World: Sejarah Melayu (The Malay Annals)
- ↑ UNESCO (2012), Memory of the World: The treasures that record our history from 1700 BC to the present day, Collins, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-00-748279-5
- ↑ 9.0 9.1 9.2 9.3 "Dutch scholar, R. Roolvink, believes that Sejarah Melayu possibly passed through several stages of development. It began as a list of kings comprising two or three pages which stated the duration of each king's reign and provided relevant dates. As stories were added, this list expanded to become a manuscript. Other tales and anecdotes were added to this manuscript, eventually resulting in the dates being omitted". eresources.nlb.gov.sg. பார்க்கப்பட்ட நாள் 10 July 2022.
- ↑ 10.0 10.1 Singapore, National Library Board. "The heritage of traditional Malay literature : a historical survey of genres, writings and literary views / Vladimir Braginsky". eservice.nlb.gov.sg (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 10 July 2022.
- ↑ 11.0 11.1 Singapore, National Library Board. "Tun Sri Lanang, the Bendahara Paduka Raja (Chancellor of Johor), wrote – or at least definitively edited – Sejarah Melayu likely between February 1614 and January 1615. This is based on evidence found in the foreword of both the shorter and the longer versions of Sejarah Melayu, as well as in section 12 of chapter 12 in Nuruddin ar-Raniri's Bustanus Salatin (Garden of Sultans – a work composed between 1638 and 1641)". eservice.nlb.gov.sg (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 10 July 2022.
- ↑ Singapore, National Library Board. "This is based on evidence found in the foreword of both the shorter and the longer versions of Sejarah Melayu, as well as in section 12 of chapter 12 in Nuruddin ar-Raniri's Bustanus Salatin25 (Garden of Sultans – a work composed between 1638 and 1641)". eservice.nlb.gov.sg (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 10 July 2022.
- ↑ Singapore, National Library Board. "Scholars faced many problems in identifying the textual history of Sejarah Melayu. This is partly due to the anonymity of its authors, and variation in form and content as copyists were given the freedom to change and embellish the text they copied.27 Furthermore, contents of the available texts are of different value as some are fragmentary and incomplete". eservice.nlb.gov.sg (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 10 July 2022.
மேலும் படிக்க
- Abdul Samad Ahmad (1979), Sulalatus Salatin, Dewan Bahasa dan Pustaka, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-983-62-5601-0, archived from the original on 12 அக்டோபர் 2013
- Asmah Haji Omar (2004), The Encyclopedia of Malaysia: Languages & Literature, Editions Didlers Millet, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-981-3018-52-5
- Australian National University, Malay Concordance Project
- Encyclopædia Britannica (2014), Sejarah Melayu
- Harper, Timothy Norman (2001), The End of Empire and the Making of Malaya, Cambridge University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-00465-7
- Kheng, Cheah Boon (1998), Sejarah Melayu The Malay Annals MS RAFFLES No. 18 Edisi Rumi Baru/New Romanised Edition, Academic Art & Printing Services Sdn. Bhd.
- Leyden, John (1821), Malay Annals (translated from the Malay language), Longman, Hurst, Rees, Orme and Brown
- Ooi, Keat Gin (2009), Historical Dictionary of Malaysia, Scarecrow Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8108-5955-5
- Perpustakaan Negara Malaysia (2013), Sulalatus Salatin: Karya Agung Melayu di Institusi Simpanan Dunia (PDF), Dewan Bahasa dan Pustaka, archived from the original (PDF) on 1 பெப்பிரவரி 2014
- Riddell, Peter C. "Malay Annals" in Kelly Boyd, ed. (1999). Encyclopedia of Historians and Historical Writing vol 2. Taylor & Francis. pp. 756–57. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781884964336.; Historiography.
- Roolvink, Roelof (1967), The Variant Version of The Malay Annals (PDF)
- Sabrizain, Sejarah Melayu – A History of The Malay Peninsula
- Siti Hawa Hj. Salleh (2010), Malay Literature of the 19th Century, Institut Terjemahan Negara Malaysia, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-983-068-517-5
- UNESCO (2001), Memory of the World: Sejarah Melayu (The Malay Annals)
- UNESCO (2012), Memory of the World: The treasures that record our history from 1700 BC to the present day, Collins, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-00-748279-5