வேலை நிறுத்தம்

வேலை நிறுத்தம் என்பது தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து வேலையை நிறுத்தி வைத்தல் ஆகும். தொழிலாளர்களின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்கத் தொழிலாளர்கள் பயன்படுத்தும் ஒரே ஆயுதம் வேலை நிறுத்தம் தான். தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தின் மூலம் நிருவாகத்தைப் பணிய வைத்துத் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். செருமனி, பிரான்சு போன்ற நாடுகளைப் போன்று இந்தியாவிலும் வேலை நிறுத்தம் செய்யும் உரிமை முழுமையானது அல்ல. ஒரு தொழிற்சாலையில் வேலை நிறுத்தம் செய்வதற்கு முன்பும், செய்யப்பட்ட பின்பும் கடைப்பிடிக்க வேண்டிய நிபந்தனைகளும் கட்டுப்பாடுகளும் அதிகமாக இருக்கின்றன. அவற்றைப் பின்பற்றாவிட்டால் வேலை நிறுத்தம் சட்டவிரோதமாகி விடும்.[1][2][3]

வரையறை

தொகு

இந்தியாவில் வேலை நிறுத்தம் என்பதைத் தொழிற்றகராறுகள் சட்டம் பிரிவு-இரண்டில் (கியூ) தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வேலையை நிறுத்தி வைத்தல் அல்லது பொதுவான நோக்கத்துடன் திட்டமிட்டு வேலையைச் செய்ய மறுத்தல் என்று வரையறை செய்யப்படுகிறது. இதன்படி,

  • தொழிலாளர்கள் அனைவரும் பொதுக்கருத்துடன் ஒன்று சேர்ந்து வேலையை நிறுத்தி இருக்க வேண்டும் அல்லது வேலை செய்ய மறுத்திருக்க வேண்டும்.
  • வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் அந்தத் தொழிற்சாலையில் வேலை செய்பவர்களாக இருக்க வேண்டும்.
  • வேலை செய்ய மறுப்பது தொழிலாளர்களின் திட்டமிட்ட கூட்டுச் செயலாக இருக்க வேண்டும்.
  • வேலை நிறுத்தம் என்பது தொழிலாளர்கள் செய்யும் வேலையுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும்.

வேலை நிறுத்த வகைகள்

தொகு

வேலை நிறுத்தத்திற்கென்று குறிப்பிட்ட வகைகள் எதுவுமில்லை. இருப்பினும் தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காகச் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு பல வழிமுறைகளைக் கையாளுகின்றனர். இதனடிப்படையில் வேலை நிறுத்தம் கீழ்க்காணும் வகைகளாகப் பிரிக்கப்படுகிறது.

பொது வேலை நிறுத்தம்

தொகு

நாடு முழுவதும் அல்லது மாநிலம் முழுவதும் ஒரே தொழிலில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் அனைவரும் தங்களின் பொதுவான கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரே நேரத்தில் செய்யும் வேலை நிறுத்தம் பொது வேலை நிறுத்தம் எனப்படுகிறது.

அடையாள வேலை நிறுத்தம்

தொகு

தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளைக் கண்டு கொள்ளாமல் இருக்கும் நிருவாகங்களுக்குத் தங்களின் ஒற்றுமையை உணர்த்துவதற்காகவும், தங்கள் கோரிக்கைகளைத் தொடர்ந்து கவனிக்காமல் விட்டால் தொடர் வேலை நிறுத்தம் செய்யப்போவதன் அடையாளமாகவும் ஒரு நாள் முழுவதும் அல்லது ஒரு மாற்று முறையில் மட்டும் வேலை நிறுத்தம் செய்வது அடையாள வேலை நிறுத்தம் எனப்படுகிறது.

உள்ளிருப்பு வேலை நிறுத்தம்

தொகு

தொழிற்சாலைக்கு உள்ளே இருந்து கொண்டு வேலை செய்ய மறுக்கும் நிலைக்கு உள்ளிருப்பு வேலை நிறுத்தம் என்று பெயர்.

அனுதாப வேலை நிறுத்தம்

தொகு

ஒரு தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் மற்றொரு தொழிற்சாலையில் நடக்கும் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்வது அனுதாப வேலை நிறுத்தம் எனப்படுகிறது.

உண்ணாவிரதப் போராட்டம்

தொகு

தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதியான முறையில் உண்ணாவிரதம் இருந்து கோரிக்கைகளை நிறைவேற்றுவது உண்ணாவிரதப் போராட்டம் எனப்ப்டுகிறது.

சட்டப்படியான வேலையை மட்டும் செய்யும் போராட்டம்

தொகு

சாதாரணமாகத் தொழிலாளர்கள் தங்கள் வேலையைச் செய்யும்போது அதனோடு தொடர்புடைய மற்ற வேலைகளையும் செய்வார்கள். ஆனால் இவ்வகையான வேலை நிறுத்தத்தின் போது தங்களுக்கு இடப்பட்ட சட்டப்படியான வேலையை மட்டும் அவர்கள் செய்வதால் வேலை தாமதமாகி உற்பத்திக் குறைவு ஏற்படுகிறது. இவ்வகை வேலை நிறுத்தம் பொதுப்பணிகளில் அதிகம் நடைபெறும்.

முற்றுகைப் போராட்டம்

தொகு

தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும்வரை அந்நிறுவனத்தின் முதலாளி அல்லது நிருவாகியை ஓரிடத்திலிருந்து செல்ல விடாமல் தடுத்து அவரைச் சுற்றி அமர்ந்து முற்றுகையிடுவதாகும். ஆனால், இது ஒரு நபரை அவருடைய பணியைச் செய்யவிடாமல் சட்டவிரோதமாகத் தடுத்துச் சிறை வைப்பது போன்றதாகக் கருதப்படுவதால் இது சட்டத்தின் மூலம் தண்டிக்கக்கூடியதாகவும் இருக்கிறது.

வேலை நிறுத்த உரிமையின் மீதான கட்டுப்பாடுகள்

தொகு

இந்தியாவில் வேலை நிறுத்தம் செய்யும் உரிமை முழு உரிமையுடையது அல்ல. 1947ஆம் ஆண்டு தொழிற்றகராறுகள் சட்டம் வேலை நிறுத்தத்தின் மீது சில கட்டுப்பாடுகளை விதிக்கிறது. வேலை நிறுத்தம் கட்டுப்பாடுகளின்றி இருந்தால் நாட்டின் தொழில் அமைதி பாதிக்கப்பட்டு உற்பத்தி குறைந்து போகக் கூடும் எனும் அச்சமே இக்கட்டுப்பாடுகளை விதிப்பதற்கான காரணம். தொழிற்றகராறுகள் சட்டம் வேலை நிறுத்தத்தின் மீது பொதுவாகச் சில கட்டுப்பாடுகளை விதித்தாலும், பொதுப் பயன்பாட்டுப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் செல்வதற்கு சில கூடுதல் நிபந்தனைகளை விதிக்கிறது.

பொதுப் பயன்பாட்டுப் பணிகளில் கட்டுப்பாடுகள்

தொகு

பொதுப் பயன்பாட்டுப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் செய்வதற்கு முன்பு சில நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அவை.

  1. வேலை நிறுத்தம் செய்வதற்கு ஆறு வாரங்களுக்கு முன்பாக அது குறித்த அறிவிப்பு ஒன்றை நிருவாகத்திடம் அளிக்க வேண்டும்.
  2. இத்தகைய அறிவிப்புத் தந்து 14 நாட்கள் முடிவதற்கு முன்னரே வேலை நிறுத்தத்தில் செல்லக் கூடாது.
  3. அந்த அறிவிப்பில் வேலை நிறுத்தம் செய்யப் போவதாகக் குறிப்பிட்ட நாளுக்கு முன்னதாக வேலை நிறுத்தம் செய்யக்கூடாது.
  4. ஒரு கோரிக்கை குறித்துச் சமரச நடவடிக்கை நிலுவையில் இருக்கும்போது அல்லது அந்தச் சமரச உரையாடல் முடிந்து ஏழு நாட்களுக்குள்ளாக, அதே கோரிக்கை குறித்து வேலை நிறுத்தம் செய்யக் கூடாது.

சட்டவிரோதமான வேலை நிறுத்தம்

தொகு

மேற்காணும் நான்கு நிபந்தனைகளில் ஒன்றை மீறினாலும் அது பொதுப் பயன்பாட்டுப் பணிகளில் சட்டவிரோதமான வேலை நிறுத்தம் என்றாகி விடும்.

பிற தொழில்களில் கட்டுப்பாடுகள்

தொகு

பொதுப்பயன்பாட்டுப் பணிகள் தவிர இதர தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்கள் எவ்வித அறிவிப்பும் தராமல் தாமாகவே வேலை நிறுத்தத்தில் ஈடுபடலாம். ஆனால் அது கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

  1. சில கோரிக்கைகள் குறித்துச் சமரச நடவடிக்கைகள் நிலுவையில் இருக்கும்போது அல்லது அவை முடிவு செய்யப்பட்டு ஏழு நாட்கள் நிறைவடையும் முன்பாக வேலை நிறுத்தம் செய்யக் கூடாது.
  2. தொழிலாளர் நீதிமன்றம், தொழில் தீர்ப்பாயம், தேசியத் தீர்ப்பாயம், இசைவுத் தீர்ப்பாயம் ஆகியவற்றில் வழக்கு நிலுவையில் இருக்கும்பொழுது அல்லது அவை முடிவுக்கு வந்து இரு மாதங்கள் நிறைவடையும் முன்பாக அதே கோரிக்கைகளுக்காக வேலை நிறுத்தத்தில் செல்லக் கூடாது.
  3. வேலை நிறுத்தக் கோரிக்கைகள் குறித்து அத்தொழிலாளர்களைக் கட்டுப்படுத்தும் உடன்பாடுகள் அல்லது முடிவுகள் ஏதேனும் ஏற்பட்டு அது செயலில் இருக்குமானால் அத்தொழிலாளர்கள் அதே கோரிக்கைகளுக்காக மீண்டும் வேலை நிறுத்தம் செய்யக் கூடாது.

சட்டவிரோதமான வேலை நிறுத்தம்

தொகு

மேற்கண்ட நிபந்தனைகள் மீறப்படும்போது அத்தகைய வேலை நிறுத்தம் சட்டவிரோத வேலை நிறுத்தம் என்றாகி விடும்.

சட்டவிரோத வேலை நிறுத்தத்தின் விளைவுகள்

தொகு
  1. சட்ட விரோதம் என அறிவிக்கப்பட்ட வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அந்த வேலை நிறுத்தக் காலத்திற்கு உரிய சம்பளம் பெறத் தகுதியற்றவர்களாகின்றனர்.
  2. நிருவாகம் சட்டவிரோதமான வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம்.
  3. சட்டவிரோதமான வேலை நிறுத்தத்தின் போது வேலை செய்து கொண்டிருக்கும் தொழிலாளர்களைத் தடுக்கும் நோக்குடன் வன்முறையில் ஈடுபடும் தொழிலாளர்களை நிருவாகம் வேலை நீக்கம் செய்யலாம்.
  4. சட்ட விரோத வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கம் தனக்கு வழங்கப்பட்ட சட்டப் பாதுகாப்புகளை இழந்து விடாது.
  5. சட்ட விரோத வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட காரணத்தினால் மட்டுமே தொழிலாளி-முதலாளி உறவு முடிவுக்கு வந்து விடாது.

இதையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. ""There is No Such Thing as an Illegal Strike": Reconceptualizing the Strike in Law and Political Economy".
  2. Aleksander Smolar, "Towards 'Self-limiting Revolution': Poland 1970–89", in Adam Roberts and Timothy Garton Ash (eds.), Civil Resistance and Power Politics: The Experience of Non-violent Action from Gandhi to the Present, Oxford University Press, 2009 பரணிடப்பட்டது 25 நவம்பர் 2022 at the வந்தவழி இயந்திரம், pp. 127–43. This book contains accounts on certain other strike movements in other countries around the world aimed at overthrowing a regime or a foreign military presence.
  3. Mommsen, Hans (1996). The Rise and Fall of Weimar Democracy. Translated by Forster, Elborg; Jones, Larry Eugene. Chapel Hill: University of North Carolina Press. p. 83. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-807-82249-4.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேலை_நிறுத்தம்&oldid=4103602" இலிருந்து மீள்விக்கப்பட்டது