மகனாகிய கடவுள்

மகனாகிய கடவுள் என்னும் பட்டம், இயேசு கிறிஸ்துவுக்கு கிறித்தவ மதப்பிரிவினரால் தரப்படும் அடையாளம் ஆகும். தந்தையாகிய கடவுள் தனது ஒரே மகனை அனுப்பி உலகத்தை பாவங்களில் இருந்து மீட்டார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை ஆகும்.[1]

மகனாகிய கடவுள்

இறைமகன் அல்லது மகனாகிய கடவுள் என்பவர் அதிபுனித திரித்துவத்தின் இரண்டாம் ஆள் (நபர்) ஆவார். இறைத்தந்தையால் பிறப்பிக்கப்படும் நித்திய (முடிவில்லாத) வார்த்தையாக இருப்பதால் இவர் மகன் என்று அழைக்கப்படுகிறார். விண்ணகம், மண்ணகம், நாம் காண்பவை, காணாதவை அனைத்தையும் தந்தையாகிய கடவுள் இவர் வழியாகவே படைத்தார்; அனைத்தும் இவருக்காகவே படைக்கப்பட்டன.[2] மானிடரான நமக்காகவும், நமது மீட்புக்காகவும் விண்ணகத்திலிருந்து இறங்கினார்.[3] இவர் தூய ஆவியாரின் வல்லமையால், கன்னி மரியாவிடம் உடல் எடுத்து மனிதர் ஆனார். இவர் தனது இறைத்தன்மையில் தந்தைக்கு சமமானவர், மனிதத்தன்மையில் தந்தைக்கு கீழ்ப்பட்டவர். இவர் அருளும் வாய்மையும் நிறைந்தவராய் நம்மிடையே விளங்கினார். இவர் இறைவனின் அரசை அறிவித்து, அதை மக்களிடையே உருவாக்கினார். இவர் நம்மீது அன்பு செலுத்தியது போன்று, நாமும் ஒருவர்மீது ஒருவர் அன்பு செலுத்துமாறு புதிய கட்டளையைத் தந்தார்.

இயேசு கிறிஸ்து, மன எளிமை, சாந்தம், பொறுமையுடன் சகித்தல், நீதியின்பால் தாகம், இரக்கம், இதயத் தூய்மை, சமாதான விருப்பம், நீதியினிமித்தம் துன்பப்படுதல் ஆகிய வழிகளைக் கற்பித்தார். கடவுளின் செம்மறியான இவர், உலகின் பாவங்களை தம்மீது சுமந்து போன்சியு பிலாத்துவின் அதிகாரத்தில் பாடுபட்டு, சிலுவையில் தம்மையே பரிகார பலியாக ஒப்புக்கொடுத்து நம்மை மீட்டார். அடக்கம் செய்யப்பட்ட மூன்றாம் நாள், சாவை வென்று வெற்றி வீரராய் உயிர்த்து எழுந்தார்.[4] தனது உயிர்ப்பால் நம்மையும் உயிர்ப்பித்து, தனது அருள் வாழ்வில் நமக்கும் பங்கு தந்தார். நாற்பதாம் நாளில் விண்ணகத்திற்கு எழுந்தருளி, தந்தையாகிய கடவுளின் வலது பக்கத்தில் வீற்றிருக்கிறார். உலகம் முடியும் காலத்தில், வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க மகிமையுடன் மீண்டும் வரவிருக்கின்றார்; இவரது அரசுக்கு முடிவே இராது.[5]

"ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்; ஆட்சிப்பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ வியத்தகு ஆலோசகர், வலிமைமிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர் என்று அழைக்கப்படும்"[6] என்று இயேசுவின் பிறப்பைப் பற்றி இறைவாக்கினர் எசாயா குறிப்பிடுகிறார்.

ஆண்டவர் என் தலைவரிடம் "நான் உம் பகைவரை உமக்குப் கால்மணையாக்கும்வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்" என்று உரைத்தார்[7] என தாவீது அரசர் கூறுகிறார்.

"வானத்தின் மேகங்களின் மீது மானிட மகனைப் போன்ற ஒருவர் தோன்றினார்; இதோ! தொன்மை வாய்ந்தவர் அருகில் அவர் வந்தார்; அவர் திருமுன் கொண்டு வரப்பட்டார். ஆட்சியுரிமையும் மாட்சியும் அரசும் அவருக்கு கொடுக்கப்பட்டன; எல்லா இனத்தாரும் நாட்டினரும் மொழியினரும் அவரை வழிபட வேண்டும்; அவரது ஆட்சியுரிமை என்றுமுளதாகும்; அதற்கு முடிவே இராது; அவரது அரசு அழிந்து போகாது"[8] என்று தானியேல் நூல் இயேசுவை முன்னறிவிக்கிறது.

வானதூதர் மரியாவைப் பார்த்து, "இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது" என்றார்[9] என்று இயேசுவைப் பற்றி லூக்கா நற்செய்தி கூறுகிறது.

"கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்! கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்; தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக இயேசு கிறிஸ்து ஆண்டவர் என எல்லா நாவுமே அறிக்கையிடும்."[10] என்று பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்தில் திருத்தூதர் பவுல் குறிப்பிடுகிறார்.

"இயேசு கிறிஸ்து கட்புலனாகாத கடவுளது சாயல்; படைப்பனைத்திலும் தலைப்பேறு. ஏனெனில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை, கட்புலனாகுபவை, கட்புலனாகாதவை, அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோர், ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர் ஆகிய அனைவரும் அவரால் படைக்கப்பட்டனர். அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன. அனைத்துக்கும் முந்தியவர் அவரே; அனைத்தும் அவரோடிணைந்து நிலைபெறுகின்றன. திருச்சபையாகிய உடலுக்குத் தலையும் தொடக்கமும் அவரே. எல்லாவற்றுள்ளும் முதன்மை பெறுமாறு இறந்து உயிர்த்தெழுவோருள் அவர் தலைப்பேறு ஆனார். தம் முழுநிறைவும் அவருள் குடிகொள்ளக் கடவுள் திருவுளம் கொண்டார். சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலைநாட்டவும் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையும் அவர் வழி தம்மோடு ஒப்புரவாக்கவும் கடவுள் திருவுளம் கொண்டார்"[11] என்று கொலோசையருக்கு எழுதிய திருமுகத்தில் திருத்தூதர் பவுல் குறிப்பிடுகிறார்.

"பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்; இவரை எல்லாவற்றுக்கும் உரிமையாளராக்கினார்; இவர் வழியாக உலகங்களைப் படைத்தார்.3 கடவுளுடைய மாட்சிமையின் சுடரொளியாகவும், அவருடைய இயல்பின் அச்சுப் பதிவாகவும் விளங்கும் இவர், தம் வல்லமைமிக்க சொல்லால் எல்லாவற்றையும் தாங்கி நடத்துகிறார். மக்களைப் பாவங்களிலிருந்து தூய்மைப் படுத்தியபின், விண்ணகத்தில் இவர் பெருமைமிக்க கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்"[12] என்று எபிரேயருக்கு எழுதிய திருமுகம் குறிப்பிடுகிறது.

ஆதாரங்கள்

தொகு
  1. திருத்தூதர்களின் நம்பிக்கை அறிக்கை
  2. யோவான் 1:3 "அனைத்தும் அவரால் உண்டாயின; உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை."
  3. யோவான் 3:17 "உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்."
  4. திருத்தூதர் பணிகள் 4:10 "நீங்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தீர்கள். ஆனால் கடவுள் இறந்த அவரை உயிருடன் எழுப்பினார்."
  5. நிசேயா நம்பிக்கை அறிக்கை
  6. எசாயா 9:6
  7. திருப்பாடல்கள் 110:1
  8. தானியேல் 7:13-14
  9. லூக்கா 3:17-18
  10. பிலிப்பியர் 2:5-11
  11. கொலோசையர் 1:15-20
  12. எபிரேயர் 1:1-3

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகனாகிய_கடவுள்&oldid=4158766" இலிருந்து மீள்விக்கப்பட்டது