தமிழகத் திரைப்படத்துறை

(தமிழ்த் திரைப்படம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கோலிவுட் (Tamil cinema) என்று அழைக்கப்படும் தமிழ்த் திரைப்படத்துறை எனப்படுவது தமிழ் நாட்டில் இருந்து இயங்கும் தமிழ் மொழித் திரைப்படத்துறை ஆகும்.[3] இந்தியாவில் இந்தி திரைத்துறைக்கு அடுத்து பரவலாக அறியப்படும் திரைத்துறை ஆகும். 1980கள் வரை சென்னையில் கோடம்பாக்கத்தில் இருந்த திரைப்படத் தயாரிப்பு வசதிகளை முன்னிட்டு பெரும்பாலான மலையாளம், தெலுங்கு மொழித் திரைப்படங்களும் இங்கிருந்தே தயாரிக்கப்பட்டன. இதனால் தமிழ்த் திரைப்படத் துறை கோலிவுட் எனவும் அழைக்கப்படுகிறது.[4][5][6]

தமிழகத் திரைப்படத்துறை
திரைகளின் எண்ணிக்கை1671(தமிழ்நாடு) மற்றும் (பாண்டிச்சேரி)[1]
முதன்மை வழங்குநர்கள்ஏவிஎம்
லைக்கா தயாரிப்பகம்
ஸ்டுடியோ கிரீன்
மெட்ராஸ் டாக்கீஸ்
2டி என்டேர்டைன்மென்ட்
சன் படங்கள்
தேனாண்டாள் படங்கள்
வி.கிரியேஷன்ஸ்
வுண்டர்பார் பிலிம்ஸ்
ரெட் ஜெயண்ட் மூவிகள்
ஆஸ்கர் பிலிம்ஸ்
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்
தயாரித்த முழுநீளத் திரைப்படங்கள் (2017)
மொத்தம்198
நிகர நுழைவு வருமானம் (2013)[2]
தேசியத் திரைப்படங்கள்இந்தியா: 1,550 கோடி (US$190 மில்லியன்)

முதல் தமிழ் ஊமைத் திரைப்படம் 1918 ஆம் ஆண்டில் இயக்குநர் ஆர். நடராஜ முதலியார் என்பவர் இயக்கிய கீசக வதம் என்ற திரைப்படம் ஆகும். முதல் பேசும் படமான காளிதாஸ் என்ற திரைப்படம் 1931 ஆம் ஆண்டில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியானது. இந்த திரைப்படத்தை எச். எம். ரெட்டி என்பவர் இயக்கியுள்ளார்.

இந்தியாவில் இருந்து வந்த தமிழ் திரைப்படங்கள் சிங்கப்பூர், இலங்கை, மலேசியா, ஜப்பான், மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, ஓசியானியா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா போன்ற பிற நாடுகளில் திரையிடுவதன் மூலம் உலகதிரைப்பட துறையில் தனக்கான ஒரு அங்கீகாரத்தை பெற்றுள்ளது.

தயாரிப்பு

தொகு

2000ஆம் ஆண்டு மலையாள மனோரமா நூலின் படி, 5000க்கும் கூடுதலான தமிழ்த் திரைப்படங்கள் இருபதாம் நூற்றாண்டில் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தியத் திரைப்படத் தணிக்கை நிறுவனத்தின் புள்ளிவிவரங்களின் படி, 2003ல் இந்தியாவின் மூன்றாவது பெரிய திரைப்படத் தயாரிப்புக் களமாக கோலிவுட் விளங்கியது. 1916 முதலே தமிழில் மௌனத் திரைப்படங்களும், 1931 முதல் வசனங்களுடன் கூடிய திரைப்படங்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. 1939ல் மெட்ராஸ் சட்டமன்றம் ஒப்புதல் அளித்த "பொழுதுபோக்கு வரிச் சட்டம் 1939", அக்காலத்தில் நிகழ்ந்த தமிழ்த் திரைப்படத்துறையின் அபார வளர்ச்சிக்குச் சான்றாகும்.

இந்தித் திரைப்படங்களுக்கு இணையாகவோ மிக நெருக்கமாவோ தமிழ்த் திரைப்படங்களின் பார்வையாளர் வட்டமும் பெரிதாக இருப்பதாகக் கருதப்படுகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் வாழும் தமிழர்கள் தமிழ்த் திரைப்படங்களை விரும்பிப் பார்ப்பதுடன், புதிதாக வெளியாகும் தமிழ்த் திரைப்படங்களை உடனுக்குடன் கேரளம், ஆந்திரப் பிரதேசம், வட இந்தியா ஆகிய மாநிலங்களில் நேரடியாகவோ மொழிமாற்றியோ காண்பிக்கப்படுகின்றன. வணிக வெற்றி பெறும் பல தமிழ்த் திரைப்படங்கள் பின்னர் இந்திய மொழிகளில் மொழிமாற்றப்பட்டு வெளியிடப்படும் வழக்கம் உண்டு. எடுத்துக்காட்டாக ரோஜா என்ற திரைப்படத்தின் கதையைப் பிற மாநிலத்தவர் வாங்கி மீண்டும் அம்மாநில மொழி நடிகர்களைக் கொண்டு படமாக்கியதைச் சொல்லலாம். சிலவேளைகளில், முன்னணி இயக்குனர்கள் ஒரே கதையை தமிழ், இந்தி, தெலுங்கு என்று பல மொழிகளில் ஒரே நடிகர்களைக் கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. உதாரணமாக பாம்பே, ஹேராம், ஆய்த எழுத்துபோன்ற திரைப்படங்கள் இதற்குள் அடங்கும்.

வணிகம்

தொகு

வணிக வெற்றியை உறுதி செய்வதற்காக, பிற மொழித் திரைப்படங்களின் கதைகளைத் தமிழில் எடுப்பதும் வழக்கமான ஒன்று தான். இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் காலங்காலமாக வாழும் தமிழர்களும், வேலைவாய்ப்புத் தேடி அங்கு செல்லும் தமிழர்களும் தமிழ்த் திரைப்படங்களை விரும்பிப் பார்த்து அவற்றின் வணிக வெற்றிக்கு ஒரு காரணமாய் இருக்கின்றனர். இலங்கை இனப் பிரச்சினை, வளைகுடா நாட்டு வேலைவாய்ப்புகள், இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி ஆகியவற்றின் காரணமாக உலகின் பல நாடுகளிலும் குடியேறியிருக்கும் தமிழர்கள் தமிழ்த் திரைப்படங்களுக்கு ஒரு பரந்த சந்தையை உருவாக்கித் தருகின்றனர். தென்னாப்பிரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளில் நிலவும் பண்பாட்டுச் சூழல்கள் காரணமாக, தமிழ்த் திரைப்படங்கள் இங்கும் வரவேற்பைப் பெற்றுள்ளன. பிரியசகி, ஆப்பிரிக்க மொழியான சுலு மொழி மொழிபெயர்க்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படமாகும்.

ரஜினிகாந்த் மற்றும் மீனா நடித்த முத்து திரைப்படம் ஜப்பானில் குறிப்பிடத்தக்க அளவு ஓடியதாக கருதப்படுகிறது. ஹாலிவுட், பாலிவுட் திரைப்படங்களுக்கு இணையாக தமிழ்த் திரைப்படங்களும் ஒரே நாளில் உலகெங்கும் வெளியிடப்படுகின்றன. வெளிநாட்டு விநியோக உரிமைகள், வெளிநாட்டுத் தொலைக்காட்சி உரிமைகள் ஆகியவற்றை விற்பதன் மூலம் முன்னணித் திரைப்படங்கள் கணிசமான வருமானம் ஈட்டுகின்றன. எனினும், இவ்வாறு தரப்படும் வெளிநாட்டு உரிமைகள் திரைப்படங்களின் திருட்டுப் பிரதிகளை இலகுவாக எடுக்க வழிசெய்கிறது என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.

தமிழ்நாட்டின் மொத்த மாநில உற்பத்தியில் தமிழ்த் திரைப்படத்துறையின் பங்கு ஒரு விழுக்காடு என்று கருதப்படுகிறது. தமிழ்த் திரைப்படத் தயாரிப்புப் போக்குகள் காலமாற்றங்களுக்கு ஏற்ப ஏறி வந்துள்ளன. அவற்றின் விவரம் கீழ்வருமாறு:

  • 1930கள் - ஆண்டுக்கு சராசரியாக 22.5 திரைப்படங்கள் வெளியீடு.
  • 1940கள் - ஆண்டுக்கு சராசரியாக 22.1 திரைப்படங்கள் வெளியீடு.
  • 1950கள் - ஆண்டுக்கு சராசரியாக 32.6 திரைப்படங்கள் வெளியீடு.
  • 1960கள் - ஆண்டுக்கு சராசரியாக 43.0 திரைப்படங்கள் வெளியீடு.
  • 1970கள் - ஆண்டுக்கு சராசரியாக 62.5 திரைப்படங்கள் வெளியீடு.
  • 1980கள் - ஆண்டுக்கு சராசரியாக 104.6 திரைப்படங்கள் வெளியீடு.
  • 1990கள் - ஆண்டுக்கு சராசரியாக 101.2 திரைப்படங்கள் வெளியீடு.

பிரச்சினைகள்

தொகு

1990கள் வரை போட்டியற்ற பொழுதுபோக்கு ஊடகமாக இருந்த தமிழ்த் திரைப்படத் துறை, செயற்கைக் கோள் தொலைக்காட்சிகளின் வருகையால் ஆட்டம் கண்டது. தொழில்நுட்ப முன்னேற்றங்கள் திரையரங்குக்கு வராமலேயே எளிதாக திருட்டுத் தனமாக வீட்டிலிருந்தே படங்களை பார்க்க வழி செய்தன. உலகத் திரைப்படங்களுடனான மக்களின் பரிச்சயம், தமிழ்த் திரைப்படத் தயாரிப்புத் தரத்தில் எதிர்பார்க்க வைத்தது. நாள்தோறும் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நாடகத் தொடர்களில் பெண்களின் கவனம் திரும்பியதாலும், உயர்ந்து வந்த திரையரங்குச் சீட்டுக் கட்டணங்களாலும், போக்குவரத்து நெரிசல்களாலும் குடும்பத்துடன் திரையரங்குக்கு வரும் போக்கு குறைந்தது. கூடி வரும் தயாரிப்புச் செலவுகள், கணிக்க இயலாத மக்களின் இரசனை, அதிக ஊழியம் வாங்கும் நடிகர்கள், திருட்டுத் திரைப்பட வட்டுப்புழக்கம், விலை உயர்வான திரையரங்குச் சீட்டுகள், தரமற்ற திரையரங்குகள் ஆகியவை தற்போதைய தமிழ்த் திரைப்படத் துறையின் பிரச்சினைகளாக கருதப்படுகின்றன.

ஆர்வம்

தொகு

தமிழரின் அன்றாட வாழ்விலும் ஆர்வங்களிலும் தமிழ்த் திரைப்படத் துறை ஏற்படுத்தும் தாக்கம் குறிப்பிடத்தக்கது. தமிழ்த் திரைப்படத் துறையை சார்ந்து பல தொலைக்காட்சிகள், இதழ்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. தமிழ்த் திரைப்படங்கள் ஊடாக நாட்டு விடுதலை கருத்துக்கள், சமூக சீர்திருத்தக் கருத்துக்கள், அரசியல் இயக்கங்களின் முழக்கங்கள் ஆகியவை மிகவும் வெற்றிகரமாக பரப்பபட்டுள்ளன. மேலை நாடுகளில் இருப்பது போல் வணிக ரீதியில் தனித்தியங்கும் இசை, நடன, கலை முயற்சிகள் தமிழ்நாட்டில் மிகக் குறைவு என்பதால், தமிழ்த் திரைப்படத் துறை தமிழ்நாட்டின் வாழ்க்கை முறை, நவீனம், கலையார்வம் ஆகியவற்றில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. எழுத்து, இசை, நடனத் துறைகளில் சிறந்தோர் கூடுதல் புகழ் வெளிச்சம், பணம் ஆகிய காரணங்களுக்காக தமிழ்த் திரைப்படத் துறையில் இணைந்து பங்காற்றவதும் பொதுவாக காணத்தக்கது. பிற கலைத்துறைகளைப் போலவே, திரைப்படத் துறையினரின் புகழ் வெளிச்சமும் மிகையான ஒன்று. இந்தி பேசப்படாத நாடுகளில் கூட பாலிவுட் நடிகர்களின் தாக்கம் இருக்கையில், இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் பாலிவுட்டின் தாக்கம் ஏறக்குறைய இல்லாமலே இருப்பது, தனித்தியங்கும் தமிழ்த் திரைப்படத் துறையின் பரப்பை விளங்கிக் கொள்ள உதவும்.

அன்றாட வாழ்வில், மாநிலத்தின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் தமிழ்த் திரைப்படத்துறையின் கலைத் திறம் கேள்விக்குரிய ஒன்றுதான். வணிகத் திரைப்பட முயற்சிகள் அளவுக்கு கலை நுட்பம் மிகுந்த திரைப்படங்களுக்கு தயாரிப்பாளர்களின் ஆதரவு இல்லாத நிலை இருக்கிறது. கலை நுணுக்கத்துடன் எடுக்கப்படும் திரைப்படங்கள் அத்திபூத்தாற் போல் வணிக வெற்றியடைவதும் உண்டு. வணிகத் திரைப்படங்களின் கதைகள் நகரம் சார்ந்தும் கதைத் தலைவன் சார்ந்தும் இருப்பதால், அவை யதார்த்தம் குறைந்தும் புதுமை குறைந்தும் இருப்பதும் ஒரு குறை. தற்போது, இளைஞர்களே திரையரங்குகளுக்கு வரும் முதன்மை பார்வையாளர்களாக உள்ளனர். இம்மாற்றம், கதைக் களத்தையும் இளைஞர்களுக்கு ஆர்வமூட்டுவதாக்கச் செய்தது. 1990கள் வரை தமிழ்த் திரைப்படங்களில் காணப்பட்ட ஊரகக் கதைகள், குடும்பக் கதைகள் குறைந்து சண்டைகள், வண்ணமயமான பாடல் காட்சிகள், காதல் கதைகள், பல வேளைகளில் ஆபாசத்தை நெருங்கும் காட்சியமைப்புகள், இரட்டை அர்த்த வசனங்கள் என்று திரைப்படங்களின் உள்ளடக்கங்கள் மாறத் தொடங்கின.

உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு இடையில் தமிழ்த் திரைப்படங்கள் ஒரு வலுவான பாலமாகத் திகழ்கின்றன. நிகழ்காலப் பேச்சுத் தமிழ், நாட்டு நடப்புகள், பண்பாட்டுப் போக்குகள் ஆகியவை குறித்த தோற்றத்தை நிறுவுவதில் தமிழ்த் திரைப்படங்களின் பங்கு இன்றியமையாதது. எனினும், இப்பொறுப்பை உணராமல் திரைப்படங்கள் தயாரிக்கப்படுவதாகவும், தமிழ்த் திரைப்படத் துறை சமூகத்தின் மீது ஏற்படுத்தும் நல்விளைவுகளைக் காட்டிலும் தீய விளைவுகளே கூடி வருவதாகவும் பொதுவான குற்றச்சாட்டு இருக்கிறது. தமிழ்த் திரைப்படங்கள், உண்மையான தமிழர் வாழ்க்கையை காட்டாது மாயத் தோற்ற கதைக் களங்களில் இயங்குவதால், தமிழ்நாட்டுக்கு வெளியே வாழும் தமிழர்கள், பிற மொழி மற்றும் நாட்டவர் தமிழர்கள் குறித்த பிழையான புரிதலைப் பெறவும் வழிவகுக்கிறது. இதன் காரணமாகவும் தமிழ்த் திரைப்படத்துறை தரும் தன்னல வலிமை காரணமாகவும், பல்வேறு அமைப்புக்களும் தமிழ்த் திரைப்படத் துறையின் மீது தங்கள் கட்டுப்பாட்டை கொண்டு வர முயல்கின்றனர். அரசியல்வாதிகளாக உருவாகக்கூடிய போக்குகளை காட்டும், அரசியல் கட்சிகளின் கருத்துக்களை எதிர்க்கும் நடிகர்களின் திரைப்படங்கள் அரசியல் கட்சிகளின் காழ்ப்புணர்ச்சிக்கு ஆளாகின்றன. தங்களுக்கு உகாத கருத்துக்களை திரைப்படங்களில் காட்டக்கூடாது என்று சில சமயம் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பண்பாட்டுக் காப்பு, மொழிக் காப்பு ஆகிய காரணங்களை முன்னிட்டு திரைப்படங்களின் பெயர்கள், விளம்பர ஒட்டிகள், முன்னோட்டங்கள், காட்சிகள், கதையமைப்புகள் என அனைத்து கூறுகளிலும் பொதுமக்கள், அரசியல் பிரிவினர் எதிர்ப்பு தெரிவிப்பது, கலைச் சுதந்திரத்தை பறிப்பதாக திரைப்படக் கலைஞர்கள் கருதுகின்றனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "STATEWISE NUMBER OF SINGLE SCREENS". Film Federation of India. Archived from the original on 12 செப்டம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 21 April 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "The Digital March Media & Entertainment in South India" (PDF). Deloitte. பார்க்கப்பட்ட நாள் 21 April 2014.
  3. Hiro, Dilip (2010). After Empire: The Birth of a Multipolar World. p. 248. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-56858-427-0.
  4. "Tamil, Telugu film industries outshine Bollywood". Business Standard. 25-01-2006. பார்க்கப்பட்ட நாள் 2012-02-19. {{cite web}}: Check date values in: |date= (help)
  5. Simpfendorfer, Ben. "China's Film Industry And Its Bollywood Future".
  6. Overdorf, Jason (3 January 2013). "Tamil films give Bollywood a run for its money" – via Toronto Star.

வெளி இணைப்புகள்

தொகு
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
2024 | 2023 | 2022 | 2021 | 2020 | 2019 | 2018 | 2017 | 2016 | 2015 | 2014 | 2013 | 2012 | 2011 | 2010 | 2009 | 2008 | 2007 | 2006 | 2005 | 2004 | 2003 | 2002 | 2001 | 2000 | 1999 | 1998 | 1997 | 1996 | 1995 | 1994 | 1993 | 1992 | 1991 | 1990 | 1989 | 1988 | 1987 | 1986 | 1985 | 1984 | 1983 | 1982 | 1981 | 1980 | 1979 | 1978 | 1977 | 1976 | 1975 | 1974 | 1973 | 1972 | 1971 | 1970 | 1969 | 1968 | 1967 | 1966 | 1965 | 1964 | 1963 | 1962 | 1961 | 1960 | 1959 | 1958 | 1957 | 1956 | 1955 | 1954 | 1953 | 1952 | 1951 | 1950 | 1949 | 1948 | 1947 | 1946 | 1945 | 1944 | 1943 | 1942 | 1941 | 1940 | 1939 | 1938 | 1937 | 1936 | 1935 | 1934 | 1933 | 1932 | 1931